உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகச் சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. அதே சமயம் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிபதி சந்திரசூட் பேசியதாவது, “நீதிபதிகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் பிரதமர், முதல்வர் போன்ற அரசியல் தலைவர்கள் பங்கேற்ற வேண்டும். ஆனால், அது போன்ற தருணங்களில் நீதித்துறை தொடர்பான கருத்துக்களை அவர்கள் ஒருபோதும் நிகழ்த்தக் கூடாது. ஜனநாயக கட்டமைப்பில், அரசு தலைவர்களும், நீதிபதிகளும் தங்களது கடமைகளில் தெளிவாக உணர்ந்தே உள்ளனர். மேலும், அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்படுவார்கள்” என்று கூறினார்.