இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினருடன் நடைபெற்ற மோதல் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய நிலப்பகுதியில் சீனா நுழையவில்லை எனக் கூறியது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பல கேள்விகளை முன்வைத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், "சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு.மோடி கூறியுள்ளார். அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காகச் சண்டை? எதற்காக ராணுவத் தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?" எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.