மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் கொடூரமான முறையில் நடு சாலையில் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் நாகராஜ். 28 வயதான நாகராஜ் அதேபகுதியில் உள்ள கார் தொழிற்சாலையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த சுல்தானா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவீட்டாரும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாகராஜ்-சுல்தானா ஜோடி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். மதம் மாறி அவர்கள் திருமணம் செய்ததை பெற்றோர்கள் எதிர்த்து வந்தனர்.
இருப்பினும் இந்த காதல் ஜோடி வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று இரவு வேலை முடிந்து நாகராஜ் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது சுல்தானாவின் பெற்றோர்கள் நாகராஜை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும் 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுல்தானா 'அடிக்க வேண்டாம் என கெஞ்சிய' நிலையில் அதை பொருட்படுத்தாத இளைஞர் ஒருவர் கடப்பாரையால் நாகராஜை அடித்துக் கொல்லும் காட்சிகள் மனதை உறைய வைக்கிறது. கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுல்தானா. ''நானும் அவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என நாகராஜ் பலமுறை எனது குடும்பத்தை அணுகிய பொழுதும் எங்கள் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு பின் தனியாக வசித்துவந்த நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தினர். எல்லார் காலிலும் விழுந்தேன்.. ஆனால் நடு ரோட்ல வச்சு அவரை கொலை செய்துவிட்டார்கள்' என்றார்.