இந்தியா சார்பில் நிலவை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
இதையடுத்து ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் - 2 ஆர்பிட்டரோடு, சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களை லேண்டர் இஸ்ரோவிற்கு அனுப்பும். சந்திரயான் - 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் - 2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இஸ்ரோவின் திட்டப்படி நாளை (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது என இஸ்ரோ அறிவித்திருக்கிறது. லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்குவது ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இஸ்ரோ இந்த தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நிலவில் இருந்து 70 கி.மீ. உயரத்தில் இருந்து லேண்டர் எடுத்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
மேலும் சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக 23 ஆம் தேதி மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சி நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.