புதிய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுவரை செயல்பட்டு வந்த நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாகப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கானத் திட்டத்திற்குப் பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடமானது, 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம், மக்களவையில் சுமார் 888 பேர் வரையிலும், மாநிலங்களவையில் சுமார் 300 உறுப்பினர்கள் வரையிலும் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் கூட்டத்தின் போது மக்களவையில் 1280 உறுப்பினர்கள் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டப்பட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த மே 28 ஆம் தேதி தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைத்து நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படாததற்குப் பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துத் திறப்பு விழாவைப் புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.