![central vista](http://image.nakkheeran.in/cdn/farfuture/hx7PlrLrSUtPTujLHv68ODUVdiZpLKuW7eedBbR0B_Q/1622442993/sites/default/files/inline-images/a%20%2814%29_0.jpg)
மத்திய அரசு, இந்தியத் தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிய பாராளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணிகளும், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவற்றை அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. மேலும், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது மத்திய செயலகங்கள் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடக்க இருக்கின்றன.
கரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ஆயிரக்கணக்கான கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். இந்தநிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் அத்தியாவசியமான ஒன்றல்ல என்றும், கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்கள் நலன் கருதி, சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் இன்று (31.05.2021) இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியதோடு, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருப்பதாலும், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதாலும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த மனு உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததும் உத்தரவிட்டது.