உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றவும் நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்’ என்று தெரிவித்தனர். ‘அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிய சில மணி நேரத்திலேயே டெல்லி சேவைகள் துறை செயலாளரை பணிநீக்கம் செய்து அதிரடி காட்டியிருந்தார். இருப்பினும் இதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து நேற்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரை சந்தித்து சேவைகள் துறை செயலாளரின் மாற்றம் குறித்து விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில், நிர்வாக விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.