அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, சில நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து சமீபத்தில் அனுமதி வழங்கியது.
இங்கிலாந்தில் அனுமதியளிக்கப்பட்ட அந்த தடுப்பூசியை, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்ததோடு, இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு, நேற்று கூடி ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருப்பினும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கிய பின்னரே, இந்தியாவில் தடுப்பூசி பொதுவான பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.