சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்து வருகிறது. இந்தச் சூழலில், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் 10 மாற்று 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்துத் தெளிவான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமலிருந்த நிலையில், ஜூலை 1 முதல் 15 வரை திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகளும், ஐ.சி.எஸ்.இ. தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் இன்று தெரிவித்துள்ளார். முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும் எனவும், எனினும் தேர்வெழுதி மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு உகந்த சூழல் ஏற்படும்போது தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.