12- ஆம் வகுப்புத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது சி.பி.எஸ்.இ.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நான்காவது முறையாக மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வுகள், சி.பி.எஸ்.சி. தேர்வுகள், கல்லூரி பருவத்தேர்வுகள், மத்திய மற்றும் மாநில அரசு பணிக்கான தேர்வுகள், நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12- ஆம் வகுப்புத் தேர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 15- ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் 01.30 மணிவரை நடைபெறவுள்ளது. தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் வகுப்பறையில் மாணவர்கள் கிருமிநாசினி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் முகக் கவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும் என்று சி.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.