ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சக்தி மாலிக் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தின் தனி தொகுதிகளில் ஒன்றான ராணிகஞ்ச் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ரூ.50 லட்சம் கேட்டதாக குற்றம்சாட்டி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் சக்தி மாலிக். அதுமட்டுமின்றி தொகுதிக்கு தொடர்ந்து நல்லது செய்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர் வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று சக்தி மாலிக் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.