மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என வேளாண் சட்டங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, புதிய வேளாண் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், விவசாயிகள் போராட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கையும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான மற்ற வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாக கூறினார். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளோடு ஆரோக்கியமான விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை, வரும் வெள்ளிக்கிழமை வரை மற்ற வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளோடு விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எங்கள் நோக்கம் பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதே என்று கூறி, வரும் 11 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.