வெடிபொருட்கள் குறித்த சி.ஏ.ஜி. கருத்து முற்றிலும் தவறானது! - நிர்மலா சீத்தாரமன்
இந்தியாவின் பாதுகாப்புப் பிரிவில் வெடிபொருட்கள் போதுமான அளவில் இல்லை என மத்திய தணிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை முற்றிலும் தவறானது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய தணிக்கைக் குழு, இந்திய பாதுகாப்புப் படையில் போதுமான அளவு வெடிபொருட்கள் இல்லையெனவும், திடீரென போர் வந்தால் 20 நாட்களுக்கு மேல் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த வெடிபொருட்கள் குறைந்தது 40 நாட்களுக்காவது இருக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.
சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீத்தாராமன், ‘இந்திய பாதுகாப்புப் படையின் வெடிபொருட்கள் இருப்புநிலை குறித்து மத்திய தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் தவறானது. இதுகுறித்து மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆயுதங்களை வாங்குவது தொடர் நடவடிக்கையாகவே இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்