மஹாராஷ்ட்ராவில் பாஜக - சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை நடத்திவந்தன. இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்தக் கூட்டணி உடைந்தது. இதனையடுத்து பல்வேறு பரபரப்பான திருப்பங்களுக்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிகுண்டு பொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு, அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது, அதையடுத்து மஹாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் மீது அம்மாநிலத்தின் முன்னாள் காவல்துறை ஆணையர் செலுத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகள் என மஹாராஷ்ட்ரா அரசியலில் புயல் வீசி வருகிறது. அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சரத் பவார் மற்றும் பிரபுல் படேல் ஆகியோரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கடந்த சனிக்கிழமை (27.03.21) அன்று அகமதாபாத்தில் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மஹாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பு கூடியது. இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது அமித்ஷா, “அனைத்து விஷயங்களும் பொதுவெளியில் கூறப்பட வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேசியவாத காங்கிரஸ், "அப்படி எந்தவொரு சந்திப்பும் நிகழவில்லை. இது பாஜகவின் சதி. சரத் பவாரும் பிரபுல் படேலும் அகமதாபாத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அமித்ஷாவை சந்திக்கவில்லை. இது முக்கியமான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப உருவாக்கப்பட்ட செய்தி" என தெரிவித்துள்ளது.