புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் “மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியதால் இந்த வார இறுதி நாள் ஊரடங்கு. இந்த ஊரடங்கானது அடைப்பு என்பதைவிட, உங்களை அரசு அடைகாக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.
ஊரடங்கு நாட்களில் குடும்பத்துடன் செலவிடுங்கள். வீட்டிலேயும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். தும்மும்போதும் இருமும்போதும் முகக்கவசம் அணிந்திருந்தால் நல்லது. மிகவும் அவசியம் என்றால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரே நாளில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல அடைப்பு என்று எடுத்துக்கொள்ளாமல், அரசு உங்களை அடைகாக்கிறது என்று எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள், கரோனாவை ஒழிப்போம், பாதுகாப்போடு இருப்போம்” என கூறியுள்ளார்.
இதனிடையே, கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் விருந்தினர் மாளிகை, கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தமிழிசை நேற்று (23.04.2021) ஆய்வுசெய்து, அங்கு பிராணவாயு (ஆக்சிஜன்) இணைப்பிற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “மக்களைப் பாதுகாக்க தேவையான அளவு ஆக்சிஜன் வென்டிலேட்டர் படுக்கைகள், அவசரகால மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் வேண்டிய அளவுக்குப் படுக்கை வசதிகளை தயார்படுத்த கூறியுள்ளோம். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நடிகர் விவேக் மரணத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்ட நிலையில், தற்போது அது 1,500 ஆக குறைந்துவிட்டது. நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறோமோ அவ்வளவு விரைவாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக ஆரம்பிக்கும்" என்றார்.