மும்பை கட்டிட விபத்தில் 24 பேர் பலி
மும்பையில் பெய்து வரும் பலத்த மழைக்கு தெற்கு மும்பையின் சவுகத் அலி ரோட்டில் பென்டிபஜாரில் உள்ள 117 ஆண்டுகள் பழமையான 5 மாடி குடியிருப்பு ஒன்று நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பலர் பலியாகினர். தகவலறிந்து மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் சிக்கி 19 ஆண்கள், ஐந்து பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 39 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.