இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இருந்து வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் கொண்டுவந்தது.
இந்த நிலையில், பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் பயணாளிகளுக்கு, நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஏழு புதிய சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், பிஎஸ்என்எல் ஐபிடிவி, டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, பைபர் தி ஹோம் பயனர்களுக்கு தேசிய ஒய்ஃபை (Wifi) ரோமிங் சேவை, என்கிரிப்டட் கம்ப்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் போன்ற சேவையை அளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், ஏழு சேவைகளை கொடுப்பது குறித்து முடிவு செய்தது மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பிஎஸ்என்எல்-இன் புதிய லோகோவை வெளியிட்டார். அதில், பழைய பிஎஸ்என்எல் லோகோவில் இருந்த நிறத்தை, காவி நிறத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காவி நிற பின்னணியில் இந்தியாவின் வரைப்படம் அமைக்கப்பட்டு, அதை சுற்றி வெள்ளை மற்றும் பச்சை நிற அம்புகள் இடம்பெற்றுள்ளது. மேலும், கனெக்டிங் இந்தியா (Connecting India) என்ற வாசகத்திற்கு பதிலாக கனெக்டிங் பாரத் (Connecting Bharat) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு, மலிவு விலை, நம்பகத்தன்மை ஆகிய வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளது.
மத்திய பா.ஜ.க ஆட்சியில் வந்தே பாரத் ரயில், டிடி தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு காவி நிறத்தில் மாற்றி அமைத்ததை தொடர்ந்து தற்போது, மத்திய அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு காவி நிறத்தில் லோகோ மாற்றி அமைப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.