பி.எஸ். எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக இருந்த போது பாஜக தலைவர்களுக்கு முறைகேடான வகையில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய டைரி குறிப்புகளை ஆதாரமாக கொண்டு காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்த டைரியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோர் பெயர்கள் அந்த குறிப்புகளில் உள்ளதாகவும், அந்த டைரியில் எடியூரப்பாவின் கையெழுத்தும் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த டைரியின் நகலை அவர் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் ரூ.1800 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் எடியூரப்பாவின் இந்த டைரி வருமானவரி துறையிடம் இருந்தும் அவர்கள் ஏன் பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சியினரை விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக லஞ்சம் வாங்கியது என டைரி குறிப்புகள் வெளியாகி தேசிய அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.