சமீபத்தில் இணையதள உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, தனது நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்போது இன்னொரு இணையதள உணவு விநியோக நிறுவனமான ஸோமேட்டோவும் அதேபோன்ற புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஸ்விகியைப் போலவே ஸோமேட்டோவிலும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணிதான். இந்த வருடத்தில் ஒரு நிமிடத்திற்கு 22 பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளது ஸோமேட்டோ. மேலும் இந்த கரோனா காலகட்டத்தில் 414 பேர், வௌவால் சூப்பை ஸோமேட்டோ தளத்தில் தேடியுள்ளனர். வௌவால் சூப்பினால் கரோனா பரவியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவைச் சேர்ந்த யாஷ் என்பவர் ஸோமேட்டோவில் 1,380 ஆர்டர்கள் செய்துள்ளார். இந்த வருடம், அந்த தளத்தில் அதிகம் ஆர்டர் செய்தவர் இவர்தான். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4 முறை ஆர்டர் செய்துள்ளார். 2 லட்சத்திற்கு செய்யப்பட்ட ஆர்டர்தான் அந்த ஸோமேட்டோவில் இந்த வருடம் செய்யப்பட்ட மிகப்பெரிய ஆர்டர். அதற்கு 66,650 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆர்டர் 10.1 ரூபாய். இதில், 39.99 ரூபாய் சலுகை தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி வாரத்தில் மட்டும் குளோப் ஜாமூன்களுக்காக ஒரு கோடி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மும்பையில் ஸோமேட்டோ நிறுவனத்திற்காக டெலிவரி செய்பவர்கள் 4.6 கோடி டிப்ஸ்ஸாக மட்டுமே பெற்றுள்ளனர்.