இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஆண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் கைசரகஞ்ச் தொகுதியில் மூன்று முறை பா.ஜ.க சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிஜ் பூஷண் சிங்கிற்கு, நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, பிரிஜ் பூஷண் சிங்கின் மகனான கரண் பூஷண் சிங்கிற்கு பா.ஜ.க சார்பில் மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கரண் சிங் போட்டியிடும் கைசரகஞ்ச் தொகுதியில் கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று கோண்டா பகுதியில் கரண் பூஷண் சிங்குக்கு பாதுகாப்புக்கு எஸ்யூவி கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வாகனம், இரண்டு சிறுவர்கள் பயணித்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில், 17 வயது சிறுவன் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60 வயது கொண்ட பெண்மனி ஒருவரும் இந்த விபத்தில் காயமடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த இரண்டு பேரை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, பா.ஜ.க வேட்பாளரான கரண் பூஷண் சிங், வாகனத்தில் இருந்தாரா? இல்லையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, பாலியல் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய பிரஜ் பூஷண் சிங், தற்போது, அவரது மகனின் வாகனம், பைக் மீது மோதி இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.