பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் கோயிலுக்குள் நுழைந்ததால் அவரது பெற்றோருக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடியாது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த நிலையில் சிறுவன் ஒருவன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யும் இடத்திற்குச் சென்றுள்ளார்.
இதைக் கண்ட கோயில் நிர்வாகத்தினர் சிறுவனிடம் இதுதொடர்பாக விசாரித்துள்ளனர். அப்போது அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்ததும், அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வந்த அவர்களிடம் நடந்தவற்றைக் கூறி செய்த தவறுக்கு 25 ஆயிரம் அபராதம் கட்ட சொல்லியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது அம்மாநிலத்தில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. கோயில் நிர்வாகத்தின் செயலை அனைவரும் கண்டித்து வரும் நிலையில், அபராதம் விதித்த 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.