மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் செல்போன் திருடியதாகக் கூறி கிணற்றில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அட்கோன் எனும் கிராமத்தில் 9 வயது சிறுவனை செல்போன் திருடியதாகக் கூறி கிணற்றுக்குள் தொங்கவிட்டு திருடிய செல்போனை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார் ஒருவர். நான் செல்போனை எடுக்கவில்லை எனக் கூறி அந்தச் சிறுவன் அழுத போதும் சிறுவனை விடாமல் கிணற்றுக்குள் தொங்கவிட்டபடியே இருந்துள்ளார்.
இதனிடையே சிறுவனைக் காணவில்லை என அவனது குடும்பத்தார் தேடியபோது... சிறுவன் தொங்க விடப்பட்டதை வீடியோவாக எடுத்த நபர் அதனை பெற்றோரிடம் காட்டியுள்ளார். அந்த வீடியோ காட்சியினை கைப்பற்றிய பெற்றோர் அதனை காவல்துறையிடம் கொடுத்து புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி விக்ரம் சிங், “திங்கள் கிழமையன்று நடந்த சம்பவம் குறித்த புகார் பெறப்பட்டது. உடனே காவல் துறையினரை அந்தப் பகுதிக்கு அனுப்பி விசாரித்தோம். சிறுவனை தொங்கவிட்ட நபர் மீது பிரிவு 308-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தோம். அவரையும் தொடர்ந்து விசாரிக்கின்றோம்” எனக் கூறினார்.