ரயில்களில் முன்பதிவு தகவல்பட்டியல் ஒட்டுவதை நிறுத்த முடிவு!
ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான பெட்டிகளில் பெயர்ப்பட்டியல் ஒட்டுவது வழக்கம். இந்தப் பழக்கத்தைக் கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. பசுமை முன்னெடுப்பு நடவடிக்கையாக இதனை அறிவித்தது பெங்களூர் தெற்கு ரயில்வே வாரியம்தான். மூன்று மாதங்களுக்கு இதனை முயற்சி செய்துபார்க்கவும், இரண்டு மாதங்களின் முடிவில் இதுகுறித்த விரிவான அறிக்கை அளிக்கை அளிக்கவேண்டுமெனவும் ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியே இதுகுறித்த முடிவை எடுத்திருந்தாலும், மாற்றுவழிகள் குறித்த ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு முதலில் புதுடெல்லி, ஹஷ்ரத் நிஜாமுதீன், மும்பை செண்ட்ரல், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், சென்னை செண்ட்ரல், ஹவுரா மற்றும் சீல்டா ஆகிய ரயில்நிலையங்களில் மட்டும் பயன்பாட்டுக்கு வரும். மூன்று மாதங்களுக்குப் பின்னர் கிடைக்கும் கருத்துக்களைப் பொருத்து நாடுமுழுவதும் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கலந்தாலோசனையில் பயணிகள் தங்களது பயணச்சீட்டின் தற்போதைய நிலைகுறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பயண இருக்கை உறுதியானவர்களுக்கு பயணச்சீட்டிலேயே இருக்கை எண் குறிப்பிடப்பட்டிருக்கும். காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும். 139 என்ற இலவச சேவைமைய எண்ணிற்கு அழைத்து பி.என்.ஆர் எண்ணை பதிவிட்டால் வேண்டிய விவரம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ரயில்நிலையங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பலலட்சக்கணக்கான காகிதங்கள் மற்றும் உழைப்பை மிச்சப்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. பல லட்ச ரூபாய்களும் மிச்சமாகுமாம். என்னதான் ஆனாலும், தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தகவல்களை துரிதமாக, துல்லியமாக தெரிவிக்காத வரையில், பயணிகளுக்கு இது தொந்தரவாகவே இருக்கும்.
- ச.ப.மதிவாணன்