2021- 2022 ஆம் நிதியாண்டில், இந்தியா முழுவதும் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் 'Non- Gazetted Railway Employees'பிரிவில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான உற்பத்தி சார்ந்த போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 11.27 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி உள்ளிட்ட விழா காலக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தசரா விடுமுறைகளுக்கு முன்பாக இந்த போனஸ் தொகை வழங்கப்படும் எனவும், ஊழியர்களுக்கு போனஸ் வழங்க 1,832 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.