Skip to main content

பா.ஜ.க பெண் பிரமுகரைக் கொன்று 6 துண்டுகளாக வெட்டிய கொடூரம்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The a BJP woman figure passed away and into 6 pieces in karnataka

கர்நாடகா மாநிலம், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசிலாம்மா (70). இவர் கர்நாடகா மாநில பா.ஜ.க கட்சியில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுசிலாம்மா, பெங்களூர் நிசர்கா குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சுசிலாம்மா கடந்த 2 இரண்டு நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த, அதே பகுதியில் வசிக்கும் சுசிலாம்மாவின் மகள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வந்துள்ளார். ஆனால், சுசிலாம்மா குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தேர்தல் வேலையாக தனது தாய் வெளியே சென்றிருக்கலாம் என்று கருதி அவரது மகள் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே, சுசிலாம்மாவின் வீட்டின் அருகே இருந்த காலி இடத்தில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்று இருந்துள்ளது. அந்த பீப்பாயில் இருந்து துர்நாற்றம் வரவே, இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிளாஸ்டிக் பீப்பாயை திறந்து பார்வையிட்டனர். அப்போது, அதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு உடல் 6 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக, அந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், காணாமல் போன சுசிலாம்மாவின் உடல் என்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுசிலாம்மாவின் வீட்டின் அருகே வசித்து வந்த தினேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அந்த விசாரணையில், பா.ஜ.க பிரமுகரான தினேஷ், கட்சி விஷயமாக சுசிலாம்மாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவரிடம் பேசி வந்துள்ளார். இதற்கிடையே, தினேஷ் தான் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுசிலாம்மாவிடம் பணம் இருப்பதை அறிந்த தினேஷ் சம்பவம் நடந்த அன்று அவரை சந்தித்து பணம் கேட்டுள்ளார். 

ஆனால், சுசிலாம்மா தினேஷுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தினேஷ், சுசிலாம்மாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, சுசிலாம்மாவின் வீட்டின் அருகே காலி இடத்தில் இருந்த பிளாஸ்டிக் பீப்பாயில், சுசிலாம்மாவின் உடல் பாகங்களை போட்டு மறைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்