கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், நாளை மறுநாள்முதல் (23.07.2021) ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கவுள்ளது. இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் கலந்துகொள்ளவிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலத்திலிருந்து பங்குபெறும் ஒரே நபர் லோவ்லினா போர்கோஹெய்ன்தான். மேலும் அசாமிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போகும் முதல் பெண் வீராங்கனையும் லோவ்லினா போர்கோஹெய்ன்தான்.
இதனையடுத்து, லோவ்லினா போர்கோஹெய்னை ஊக்கப்படுத்தும் விதமாக, லோவ்லினாவின் தொகுதி எம்.எல்.ஏ 7 கிலோமீட்டர் தூர சைக்கிள் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பேரணியை துவங்கி வைத்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டு சைக்கிளும் ஒட்டினார்.
இந்த சைக்கிள் பேரணியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த சைக்கிள் பேரணி குறித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "மக்களின் பிரார்த்தனைகளும் ஆதரவும் லோவ்லினாவை வெற்றியின் வாசலுக்கு கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அசாமின் மக்கள் அனைவரும் லோவ்லினாவுடன் இருக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பும் தங்கள் மகளுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த 7 கிலோமீட்டர் சைக்கிள் பேரணியில் ஒன்றிணைந்துள்ளனர்" என கூறியுள்ளார்.