ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசும் பாஜக, ஹரியானா, மகாராஸ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, தனக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று பயப்படும் ஜார்கண்ட் மாநிலத் தேர்தலை மட்டும் தள்ளிவைத்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவான் கேரா கூறியதாவது… “ஹரியானா, மகாராஸ்டிரா தேர்தல்களை வரவேற்கிறோம். ஆனால், தங்கள் மாநிலத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஏன் அங்கு தேர்தலை அறிவிக்க மத்திய அரசு தயங்குகிறது. இரண்டு மாநிலத் தேர்தல்களை மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து சந்திப்போம். பொருளாதார சீர்கேடு, வேலை இழப்புகள் ஆகியவை முக்கிய பிரச்சனைகளைகா இருக்கும். லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.
ஆனால், அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்காமல் மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில கரும்பு விவசாயிகளை டெல்லி கிஸான் காட் செல்ல விடாமல் தடுத்து, எல்லையிலேயே நிறுத்தியிருக்கிறது. கடன் தள்ளுபடி, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் ஆகியவற்றைத்தான் அவர்கள் கோருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 15 லட்சம் வேலை இழப்புகளும், 20 லட்சம் கோடி ரூபாய் பங்குவர்த்தகத்தில் இழப்பும் ஏற்பட்டிருப்பதை காங்கிரஸ் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜிவாலா, “ஹரியானாவிலும், மகாராஸ்டிராவிலும் பாஜக ஆட்சிக்கு சரியான பதிலடிகொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட முதலாளித்துவ அரசுகளை முதலாளிகளே நடத்துகிறார்கள். வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்” என்றார்.