மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றவுடன் அந்த மாநில விவசாயிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் அனைவரது மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை பின்பற்றி தற்பொழுது குஜராத் மற்றும் அசாம் மாநிலத்தில் தள்ளுபடி திட்டங்களை பா.ஜ.க மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி குஜராத் விவசாயிகள் செலுத்த வேண்டிய 650 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார கட்டண பாக்கி தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பா.ஜ.க தலைமையிலான அசாம் மாநில அரசு 600 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.