கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவலாம், அதனால் வன்முறைகள் ஏற்படக்கூடும் என்று பல பகுதிகள் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்னமும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். மேலும் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ள பாஜக தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் அங்கு எப்படி சூழ்நிலை உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதில், “நான்கு மாதங்களுக்கு முன்னால் பலரை தடுப்புக் காவலில் வைக்க நேர்ந்தது. ஆனால், இப்போது அது படிபடியாக குறைந்துவிட்டது. ஆனால் இன்றோ 30 அல்லது 32 அரசியல் தலைவர்கள்தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகதான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்றிலிருந்து கார்கில் பகுதியில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சூழ்நிலை சாதகமாக இருப்பதால் ஜம்மு மற்றும் காஷ்மீர் பல்லத்தாக்கிலும் விரைவில் இணைய சேவை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.