கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் சந்திரயான் 3 வெற்றி குறித்துப் பேசினர். இதில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி பேசினார். அப்போது பாஜக எம்.பி.யான ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலியைப் பார்த்து ‘இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் அவதூறாகப் பேசினார். இதற்கு நாடாளுமன்றத்தின் உள்ளே கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரமேஷ் பிதுரிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தன.
டேனிஷ் அலி எம்.பி.யை குறிவைத்து அவதூறாகப் பேசிய பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையிலேயே கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், ரமேஷ் பிதுரிக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், “இத்தகைய நடத்தை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் பிதுரி பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக எம்.பி. ரமேஷ் பிதுரியை பா.ஜ.க நியமித்துள்ளது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வெறுப்பு பேச்சுக்கு வெகுமதியாக புதிய பொறுப்பை எம்.பி.ரமேஷ் பிதுரிக்கு பா.ஜ.க வழங்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வெறுப்பு பேச்சுக்கு பா.ஜ.க வெகுமதி கொடுத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், டேனிஷ் அலியை தகாத வார்த்தையால் பேசிய ரமேஷ் பிதுரியை டோங்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கி பரிசு கொடுத்துள்ளது. டோங்க் மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தின் மக்கள் தொகை 29.25 சதவீதம் ஆகும். இது அரசியல் பலன்களுக்கான வெறுப்பினை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.