Skip to main content

தேர்தல் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு?  உச்சநீதிமன்றத்தைச் சீண்டும் பாஜக எம்.எல்.ஏ!

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

 

BJP MLA opposes Supreme Court opinion

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மணிப்பூர் போலீசார் 4 பேரைக் கைது செய்துள்ளனர். 

 

இதனிடையே மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம்  இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளைக் களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாதது” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்திருந்தார்.

 

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்திற்கு மும்பை பாஜக எம்.எல்.ஏ அத்துல் பட்கல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “நாற்காலியில் அமர்ந்துகொண்டு முடிவு எடுப்பதால் நாட்டை எவ்வாறு சமூகமாக  நடத்திச் செல்ல முடியும். அரசு செய்ய வேண்டிய  வேலையை உச்சநீதிமன்றமே செய்ய வேண்டுமானால் தேர்தல் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு? எல்லாவற்றையும் நாற்காலியில் அமர்ந்தபடி உச்சநீதிமன்ற நீதிபதிகளே நிர்வகிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்