குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தநிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மாறாக, பாஜக சார்பில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டதிற்கு ஆதரவாக பேரணி நடத்தி வருகிறது.
அந்தவகையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பாஜக அமைச்சர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், "சிஏஏக்கு எதிராக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதோடு, பிரதமர் மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள், எங்கள் வரிப்பணத்தை சாப்பிடுகிறார்கள். பின்னர் தலைவர்களுக்கு எதிராகவே கோஷங்களை எழுப்புகிறார்கள்.
பிரதமர் அல்லது முதல்வருக்கு எதிராக கோஷமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினால், நான் உங்களை உயிருடன் அடக்கம் செய்வேன்" என தெரிவித்தார். பிரதமர், முதல்வருக்கு எதிராக கோஷமெழுப்பினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என்ற அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.