Skip to main content

“கோமியம் குடித்தால் மட்டுமே நவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி” - பா.ஜ.க நிர்வாகியின் சர்ச்சை அறிவிப்பு!

Published on 01/10/2024 | Edited on 01/10/2024
Bjp leader said people should sip cow urine before enter the function for navarathiri

இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, பெரும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா, நாளை மறுநாள் (03-10-24) தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்த நவராத்திரி விழாவையொட்டி, வடமாநிலங்களில் நடக்கும் புகழ்பெற்ற ‘கார்பா’ நிகழ்ச்சியில் மாட்டு கோமியம் குடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நவராத்திரி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிண்டு வர்மா தலைமையில் நடைபெறும், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிண்டு வர்மா, “சனாதன கலாச்சாரத்தில் ஆகம நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பக்தர்களை கார்பா பந்தல்களுக்குள் அனுமதிக்கும் முன், அவர்கள் மாட்டு கோமியத்தை குடிப்பதை உறுதி செய்யுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். சில சமயங்களில் வேறு சில நபர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள். அது விவாதங்களை உருவாக்குகிறது. 

ஆதார் அட்டையை கூட திருத்த முடியும். ஆனால், ஒருவர் இந்துவாக இருந்தால் மட்டுமே, அவர் மாட்டு கோமியத்தை குடிப்பார்.  அதன் பிறகும் கார்பா பந்தலுக்குள் அனுமதிக்கலாம். இதை மறுக்கும் பேச்சுக்கே இடமில்லை. உண்மையான இந்துவாக இருந்தால், அவர்கள் மாட்டு கோமியத்தை குடிப்பதை எதிர்க்க மாட்டார்கள்” என்று கூறினார். பா.ஜ.க நிர்வாகியின் இந்த பேச்சு, சர்ச்சையானதை தொடர்ந்து அவரை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்