இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது யோ-யோ ஃபிட்னஸ் மதிப்பெண்ணை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டது பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023 நடைபெற சில நாட்களே இருக்கும் சூழலில் இது பேசு பொருளாகியுள்ளது.
விராட் கோலி வியாழன் அன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் யோ-யோ டெஸ்டில் 17.2 புள்ளி அளவு உடற்தகுதி மதிப்பெண்ணை பெற்றதாகப் பதிவிட்டிருந்தார். அதில், “பயங்கரமான கூம்புகளுக்கு இடையே யோ-யோ சோதனையை முடித்ததில் மகிழ்ச்சி. 17.2 புள்ளிகளைத் தொட்டுள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார். கோலியின் இந்த பதிவிற்குப் பிறகு, "சமூக ஊடகங்களில் இந்த வெளிப்பாடு 'ஒப்பந்தத்தை மீறுவதாக’ இருக்கும் என்று கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ தெரிவித்தது.
இதுகுறித்து பிசிசிஐ தனது அறிக்கையில், “எவ்வித ரகசியமான தகவல்களையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை வீரர்கள் தவிர்க்க வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் படங்களை வெளியிடலாம், ஆனால் மதிப்பெண்களை தெரிவிப்பது ஒப்பந்த விதியை மீறுவதற்கு வழிவகுக்கிறது.” என்று பிசிசிஐ தரப்பு அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர். விராட் கோலியின் பதிவு வேகமாகப் பரவியதை அடுத்து அவர் அதனை நீக்கியுள்ளார்.
ஆசிய கோப்பைக்குத் தயாராகும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெங்களூர், ஆலூரில் வியாழக்கிழமை தொடங்கி ஆறு நாள் நடைபெறும் பயிற்சிக்காக முகாமிட்டுள்ளனர். விராட் கோலியை தவிர, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் பயிற்சியின் முதல் நாளில் யோ-யோ டெஸ்ட் எடுத்துக் கொண்டதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. பின்னர், இருவரும் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தகவலும் வந்தது.
மேற்கிந்தியத் தீவு தொடரில் இருந்து திரும்பிய பிறகு அயர்லாந்து தொடருக்கு செல்லாத, ஆசியக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இந்த முகாமில் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இருந்தனர். மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் அயர்லாந்தை 2-0 என வீழ்த்தியது இந்திய அணி. இதில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் வெள்ளிக்கிழமை முகாமில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.