மேற்குவங்கம் அருகே கவுகாத்தி- பிகானர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானரில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மேற்குவங்கம் மாநிலம் தோமோஹனி அருகே உள்ள ஜல்பைகுரியில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 நான்கு பெட்டிகள் கவிழ்ந்ததாக தகவல் கூறுகின்றன.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ரயில்வே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் விபத்து குறித்து, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
வடகிழக்கு எல்லை ரயில்வே, (கவுகாத்தி) தலைமை பிஆர்ஓ குனித் கவுர் (Guneet Kaur, Chief PRO, North- East Frontier Railway) கூறுகையில், "மாலை 05.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது. சுமார் 10 பெட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளை எங்கள் குழுக்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.