பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணை முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி நீடிப்பார் என்று தகவல் கூறுகின்றன.
பீகார் மாநில முதல்வராக நாளை (16/11/2020) காலை 11.30 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாகவும், விழா எளிய முறையில் நடைபெறும் என்றும் தகவல் கூறுகின்றன. பீகார் மாநில முதல்வராக ஏழாவது முறையாகவும், தொடர்ந்து நான்காவது முறையாகவும் நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை பா.ஜ.க. கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.