கரோனா தடுப்பூசிகள் வழக்கமாக மூன்று கட்டமாக பரிசோதிக்கப்படும். இந்த மூன்று கட்ட பரிசோதனை தரவுகளைக் கொண்டே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் மூன்றாவது கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமலேயே கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பிறகு தங்களது தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆய்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது.
இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளைப் பாரத் பயோடெக் தற்போது வெளியிட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஆய்வு முடிவின்படி கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒட்டுமொத்தமாக 77.8 சதவீதம் செயல்திறன் இருப்பதாக கூறியுள்ள பாரத் பையோடெக், கடுமையான அறிகுறிகளுடன் கூடிய கரோனா பாதிப்புக்கு எதிராக 93.4 சதவீதம் செயல்திறனை கோவாக்சின் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், தற்போது உலகை அச்சுறுத்திவரும் டெல்டா வகை கரோனாவிற்கு எதிராக கோவாக்சின் 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் கூறியுள்ளது. நாடு முழுவதுமுள்ள 25 இடங்களில், 18 முதல் 98 வயதுவரையிலான, அறிகுறியுடன் கூடிய கரோனா பாதிப்பு ஏற்பட்ட 130 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.