பஞ்சாப் மாநிலத்தின் 17- வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எனினும், அமைச்சர்கள் எவரும் பதவியேற்கவில்லை.
சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் காலனில் நடந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகையையும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவையும் அணிந்திருந்தனர்.
இந்த விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.