சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, சீனாவில் ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மேற்கு வங்கம் வந்த 4 பேருக்கு ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேற்கு வங்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 4 பேருக்கு பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கும் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் நால்வரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.