மெட்ரோ மேம்பாலத்தின் தூண் கட்டுமானம் இடிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்ததில் தாய் மற்றும் அவரது இரண்டு வயது மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இங்கு கல்யாண்நகர் பகுதியில் எச்.ஆர்.பி.ஆர் பகுதி வழித்தடத்தில் மெட்ரோ மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் நாகவாரா பகுதியில் மெட்ரோ தூணிற்காக அமைக்கப்பட்ட கட்டுக்கம்பிகளாலான தூண் கட்டுமானம் இடிந்து சாலையில் விழுந்தது.
அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி அவர்களது இரண்டு வயது மகன் மீதும் அந்த கட்டுமானம் விழுந்தது. இதனால் அவர்கள் சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் மூவரையும் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். தூண் கட்டுமானம் சாலையிலேயே விழுந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் விழுந்த தூண் கட்டுமானத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.