Skip to main content

பெங்களூரு ஓட்டலில் மர்மப் பொருள் வெடிப்பு; என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Bengaluru hotel incident NIA investigation

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் வெடித்துள்ளது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க வைக்கும் குழுவினர் ஓட்டலுக்கு வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உணவகத்தில் பணிபுரியும் காவலாளி கூறுகையில், “நான் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். பல வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். திடீரென பலத்த சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டது, இதனால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது" என்றார். இந்நிலையில் மர்மப் பொருள் வெடித்தது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்