பத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் நிபா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது.
இமாச்சல்பிரதேசம் மாநிலம் சிர்மாவுர் மாவட்டத்தில் உள்ளது பர்மா பாப்டி கிராமம். இங்குள்ள அரசு பள்ளியின் மரத்தடியில் பத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளன. முதலில் பள்ளி நிர்வாகிகள் அலட்சியமாக இதைக் கடந்திருந்தாலும், வவ்வால்களின் இறப்பிற்குக் காரணமாக நிபா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வவ்வால்களின் உடல்களின் இருந்து சோதனை மாதிரிகளை சேகரித்து, புனேவில் உள்ள தொற்றுவியாதிகள் தடுப்பு ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே எந்தத் தகவலும் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் நிபா எனும் வைரஸ் தாக்குதலினால் 12 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பரவுவதற்கு பழந்தின்னி வவ்வால்களே காரணம் என சொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வவ்வால்கள் இறந்திருப்பது நிபா வைரஸ் பீதியை மக்களிடையே கிளப்பியுள்ளது.