கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளே அந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்த வைரஸ் தொற்றால் உலகில் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால், அனைத்து நாடுகளும் மக்களிடம் இதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், ஊரடங்கு மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
![Bat - corona virus](http://image.nakkheeran.in/cdn/farfuture/jz3yUPnZ_n2fR6AX3yqhrZeZ6YXseuG6U5JrQ7bqzIQ/1586867896/sites/default/files/inline-images/11111_261.jpg)
இதற்கிடையில், சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் மனிதர்களிடம் பரவியது எப்படி என்பது குறித்து உலக நாடுகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. கரோனா வைரஸ் மனிதர்களுக்கு வெளவால்கள் மூலம் பரவி இருக்கக்கூடும் என்ற சர்ச்சை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதன் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பான ஆய்வு முடிவில், தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.