கர்நாடகா மாநிலம், பெங்களூர் வயலிக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அவர் இருந்த வீட்டில் இருந்து 2 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து மகாலட்சுமியின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் மகாலட்சுமியின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பிரிட்ஜில் மகாலட்சுமியின் உடல் துண்டு துண்டாக, வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
59 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உடல் துண்டுகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த மகாலட்சுமி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்பட்டது. மகாலட்சுமியுடன் பழகி வந்த அஷ்ரப் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், மகாலட்சுமியின் செல்போனை சோதனை செய்தும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், மகாலட்சுமியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தது, ஒடிசாவைச் சேர்ந்த முக்தி ரஞ்ஜன் ராய் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், மகாலட்சுமியின் உடல் போலீசாரால் மீட்கப்பட்ட நான்கு நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 25ஆம் தேதி ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் முக்தி ரஞ்ஜன் ராய் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய குறுக்கு விசாரணையில், முக்தி ரஞ்ஜன் ராய் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது தாயிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மகாலட்சுமியை கொலை செய்துவிட்டு, தனது வீட்டுக்குச் சென்ற ரஞ்ஜன் ராய், மகாலட்சுமிக்கு அதிகளவில் பணம் செலவழித்ததாகவும், அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாலும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மகாலட்சுமியும், முக்தி ரஞ்ஜன் ராயும் பெங்களூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணிபுரிந்துள்ளனர். ஒரே இடத்தில் பணிபுரிந்ததால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். இதனையடுத்து, மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராயிடம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மகாலட்சுமியின் நடத்தை மீது ராய்க்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இவர்களுக்குள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராய், மகாலட்சுமியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, முக்தி ரஞ்ஜன் ராய், தான் செய்த கொலைச் சம்பவம் குறித்து டைரி ஒன்றில் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.