பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த விவரங்களின்படி பிரதமரின் சொத்து மதிப்பு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி ரூ.2 கோடியே 85 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் கணக்குப்படி பிரதமரின் சொத்து மதிப்பு 2.49 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஒரு ஆண்டில் வங்கி வைப்புகள் மற்றும் பாதுகாப்பான முதலீடுகளின் காரணமாகப் பிரதமருக்கு 36 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, மோடியிடம் நடப்பு ஆண்டு ஜூன் 30 -ஆம் தேதி நிலவரப்படி கையிருப்பு ரூ.31,450 ஆகும். குஜராத்தின் காந்திநகர் என்.எஸ்.சி மாநிலம் பேங்க் கிளையில் ரூ.3,38,173 இருப்பு உள்ளதாகவும், மேலும், அதே வங்கிக் கிளையில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 28 ஆயிரத்து 939-க்கு ஃஎப்.டி வைத்துள்ளார். நகைகளைப் பொறுத்தவரைப் பிரதமர் மோடி ரூ.1½ லட்சம் மதிப்பிலான 45 கிராம் எடையுள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துகளைப் பொறுத்தவரை, குஜராத் காந்திநகரில் செக்டார் 1-ல் 3,531 சதுர அடி நிலத்தைப் பிரதமர் மோடி மூன்று பேருடன் கூட்டாக வைத்துள்ளார்.
பிரதமரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள அதே நேரம் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 32.3 கோடி ரூபாயாக இருந்த அமித்ஷாவின் சொத்து மதிப்பு இந்த ஆண்டுக் கணக்கின்படி, 28.6 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.