‘ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும் நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்’ என்று தெரிவித்தனர்.
‘அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படும் நிலையில் தீர்ப்பை வரவேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “எங்களது கைகள் கட்டப்பட்டு நீந்துவதற்காக தண்ணீரில் வீசப்பட்டோம். ஆனால், எங்களால் மிதக்க முடிந்ததால் தடைகள் வந்த பொழுதும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருந்த சில மணி நேரத்திலேயே டெல்லி சேவைகள் துறை செயலாளரை பணிநீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.