பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இலவச கரோனா தடுப்பூசி குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதில், பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வந்தவுடன், பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பா.ஜ.க கூறுவது, கரோனாவை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜகவுக்கு வாக்களிக்காத இந்தியர்களுக்கும் இலவச தடுப்பூசிகள் கிடைக்காதா? முழு நாட்டிற்கும் இலவச கோவிட் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இது அனைவருக்குமான உரிமை. இந்திய மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.