மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (65) சமீபத்தில் மேற்கொண்ட மருத்துவ சோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது உறுதியானது. இருந்தாலும், இதற்காக அறுவைச் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வாரா என தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த பாதிப்பினால் பொது நிகழ்வுகளில் அருண் ஜேட்லி கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், இன்னமும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 58 மாநிலங்களவை எம்.பி.க்களில் 53 பேர் கடந்த இரண்டு நாட்களாக பதவியேற்று வருகின்றனர். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாத ஐந்து பேரில் அருண் ஜேட்லியும் ஒருவர்.
கிருமி தொற்று அபாயம் காரணமாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் எனக்கூறியுள்ள மருத்துவர்களின் அறிவுரைப்படி, அருண் ஜேட்லி வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.