புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான கைலாசநாதன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான ஹரிபாவ் கிசன்ராவ் பக்டே நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநராக திரிபுரா மாநில முன்னாள் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமன் தேகா நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்ததால் அஸ்ஸாம் ஆளுநராக பணியாற்றி வரும் குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் ஆளுநராக மணிப்பூர் மாநில ஆளுநராக பணியாற்றி வரும் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் பஞ்சாப் ஆளுநராக பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.