மேற்கு வங்கத்தில், இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாநில அரசியலில் மிகுந்த பரபரப்பு நிலவிவருகிறது. கடந்த வருட இறுதியில் அமித்ஷா தலைமைலயிலான பொதுக்கூட்டத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, மேலும் 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பாஜகவில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து, இம்மாத தொடக்கத்தில், மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மிரத்தன் சுக்லா, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் எம்.எல்.ஏவாக தொடர்கிறார்.
இந்தநிலையில், மேற்கு வங்கத்தின் வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நான் சிலகாலமாக மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் இந்த முடிவை (ராஜினாமா) எடுக்க வேண்டியிருந்தது. இது எனக்கு வேதனையளிக்கிறது. என் இதயத்தை உடைக்கிறது, ஆனால் நான் இதனை செய்ய வேண்டியிருந்தது. இத்தனை ஆண்டுகளாக என்னை வழிநடத்திய மம்தா பானர்ஜிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.
ஆளும் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது, மேற்கு வங்க அரசியல் பரபரப்பை எகிற வைத்துள்ளது.